தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் செடியிலேயே வீணாகும் பச்சை மிளகாய்
ஊரடங்கால் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால், பெரம்பலூர் மாவட்டத்தில் பச்சை மிளகாய் செடியிலேயே பழுத்து வீணாகின்றன.
பெரம்பலூர்,
ஊரடங்கால் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால், பெரம்பலூர் மாவட்டத்தில் பச்சை மிளகாய் செடியிலேயே பழுத்து வீணாகின்றன.
மிளகாய் சாகுபடி
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தோட்டப்பயிரான பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பச்சை மிளகாயை பறிக்க விவசாய கூலி தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. அவை செடியிலேயே பழுத்து வீணாகிறது. அறுவடைக்கு தயாரான மிளகாய் வீணாகி வருவதால், அதனை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து புஜயங்கராயநல்லூர் விவசாயி கந்தசாமி கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 8 மாத பயிரான பச்சை மிளகாய், 50 நாளிலேயே விளைச்சலாகும். ஏற்கனவே போதிய தண்ணீர் இல்லாததாலும், அழுகல் நோயாலும் பச்சை மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவினால் விவசாய கூலித் தொழிலாளர்கள் மிளகாய் பறிக்க வராததாலும், அப்படியே அதனை பறித்தாலும் விற்பனைக்கு கொண்டு செல்ல பஸ் வசதி இல்லாததாலும், அவை செடியிலேயே பழுத்து வீணாகிறது.
ஊரடங்கிற்கு முன்னதாக ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.20 வரை விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு கிலோ பச்சை மிளகாயை ரூ.8-க்கு உள்ளூர் வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை சந்தையில் பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். சில சமயங்களில், அவர்களும் கொள்முதல் செய்ய வருவதில்லை. இதனால் செடியிலேயே பச்சை மிளகாய் பழுத்து கொட்டி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நஷ்டத்தை கருத்தில் கொண்டு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story