கரூரில் போலீசாருடன் இணைந்து பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அடையாள குறியிட்டு கண்காணிப்பு
கரூரில் போலீசாருடன் இணைந்து பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அடையாளக் குறியிட்டு கண்காணிக்கின்றனர்.
கரூர்,
கரூரில் போலீசாருடன் இணைந்து பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அடையாளக் குறியிட்டு கண்காணிக்கின்றனர்.
களத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள்
கொரோனா ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் யாரும் நடமாடுகின்றனரா? என கண்காணித்து வருகின்றனர். கரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கரூர், வெங்கமேடு, வாங்கல், பசுபதிபாளையம், தாந்தோணிமலை போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ராணுவ உடை அணிந்தே பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கேட்டு விசாரிக்கின்றனர்.
இதைத்தவிர சோதனைச் சாவடிகளில் ஊதா, சிவப்பு, பச்சை நிறங்களில் அடையாள குறியிட்டும், மேலும் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்தும் கண்காணிக்கின்றனர். நேற்று வாகனங்களில் ஊதா நிற அடையாள குறியிட்டு கண்காணித்தனர். மேலும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பிடிபட்ட மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆவணங்களை ஒப்படைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருட்களை மொத்தமாக வாங்க அறிவுறுத்தல்
இது தொடர்பாக கரூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஊரடங்கு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ளன. அந்த வகையில் தற்போது ஒவ்வொரு நிற அடையாள குறியிட்டு அந்த வாகனம் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறி தான் இத்தகைய வழிமுறையினை கையாள்கிறோம். மாறாக அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரை நாங்கள் தடுப்பதில்லை.
உரிய முறையில் விசாரித்து அனுப்பி வைக்கிறோம். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக செல்பவர்களிடம், 10-15 நாட்களுக்கு சேர்த்து வாங்கி வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறோம். தற்போது கரூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமி என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் கடைகளில் கூட்டம் கூடுகிறதா? என கண்காணித்தும் நடவடிக்கை எடுத்தும் வருகிறோம், என்றார்.
Related Tags :
Next Story