கடைகளில் விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை - அமைச்சர் கந்தசாமி தகவல்
புதுவையில் கடைகளில் பொருட்களின் விலைப்பட்டியலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மளிகை சாமான்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கடைக்காரர்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள அடக்க விலை கடைகளில் அமைச்சர் கந்தசாமி நேற்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது அரசு செயலாளர் வல்லவன், சப்-கலெக்டர் சுதாகர், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு முடிந்ததும் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அத்தியாவசிய பொருட் களை அதிக விலைக்கு விற்கக் கூடாது என்று கடைக்காரர் களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அதையும் தாண்டி கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மளிகை பொருட்களின் விலைப்பட்டியலை ஒவ்வொரு கடைகளின் முன்பும் வைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலவச அரிசி விவகாரத்தில் நாங்கள் நாடகம் நடத்துவதாக கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். உண்மையில் நாடகம் நடத்துவது அவர் தான். வாரந்தோறும் விடுமுறை நாட்களில் ஆய்வு என்ற பெயரில் ஊரை சுற்றி வந்த அவர் இப்போது வெளியில் வராதது ஏன்? அப்படியானால் அவர் நாடகம் தானே நடத்தியுள்ளார்.
மத்திய அரசு தான் இலவச அரிசி வழங்க சொல்லி உள்ளது. ஆனால் இவர் அதை மதிக்க தவறுகிறார். மாநில அரசு கொடுப்பதையும் தடுக்கிறார். மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு உள்ளனர். யார் நடிக்கிறார்கள் என்பது மக்களுக்கு இப்போது தெளிவாக தெரிந்துவிட்டது. கவர்னர் கிரண்பெடியால் மக்களுக்கு உரிய காலத்தில் அரிசி கிடைக்கவில்லை. இந்த பொறுப்பினை எங்களிடம் விட்டிருந்தால் 2 நாட்களில் மாநிலம் முழுவதும் அரிசியை சப்ளை செய்து இருப்போம்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.
Related Tags :
Next Story