தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 280 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு - அதிகாரிகள் தகவல்


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 280 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 18 April 2020 12:25 PM IST (Updated: 18 April 2020 12:25 PM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 280 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர், டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பினர். இதில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர்கள் 30 பேரில், 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி திரும்பிய 1,471 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்ததாலும், நோய் தொற்று இல்லாததாலும் 1,319 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தற்போது 152 பேர் வீட்டு கண்காணிப்பில் தொடர்ந்து உள்ளனர். நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்ட ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி ஆகிய 4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என கணக்கெடுத்து வருகின்றனர். மேலும் சளி, ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள ஆய்வகத்துடன் கூடிய நடமாடும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி காந்தல் பகுதியில் ஆய்வகத்துடன் கூடிய நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களிடம் இருந்து தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டது. கண்ணாடி அறையில் இருந்தவாறே துளைவழியாக பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டது. மாதிரி சேகரிக்கப்பட்ட பிறகு கொரோனா பரிசோதனை நடைபெற இருக்கிறது. முன்னதாக பொதுமக்கள் வாகனத்துக்குள் வரும்போது கைகளை கழுவ கிருமிநாசினி வழங்கப்பட்டது. அவர்கள் சென்ற பிறகு வாகனம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆய்வகத்துடன் கூடிய நடமாடும் வாகனம் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கே சென்று சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து வருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 280 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 156 பேருக்கு முடிவுகள் கிடைத்து இருக்கின்றன. 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, மற்ற 147 பேருக்கு பாதிப்பு இல்லை. இன்னும் முடிவுகள் வர வேண்டி உள்ளது. நடமாடும் வாகனத்தில் அமைக்கப்பட்ட கொரோனா பூத் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோர், ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்களுக்கு முதல் கட்டமாக மாதிரி எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story