ஊரடங்கு உத்தரவு எதிரொலி: கொய்மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கொடைக்கானலில் இருந்து வெளிநாடு களுக்கு கொய்மலர்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளாக கவுஞ்சி, மன்னவனூர், குண்டுப்பட்டி உள்பட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானவர்கள் கொய்மலர் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பசுமை குடில்களையும் அமைத்துள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் கொய்மலர்கள் பேக்கிங் செய்யப்பட்டு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பின்னர் அங்கிருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதன் காரணமாக கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கொய்மலர்கள் அனைத்தும் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் கொய்மலர்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பூக்களும் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. ஆனால் இவற்றை வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியாததால் விவசாயிகள் பூக்களை பறித்து கீழே கொட்டும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேல்மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மூர்த்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், ‘கடந்த காலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கொய்மலர்களுக்கு நல்ல விலை கிடைத்தது. உள்ளூரில் ஒரு பூவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கிடைத்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வாங்கிச்செல்ல வருவதில்லை.
வாகன போக்குவரத்து முடக்கப்பட்டதால் எங்களால் கொய்மலர்களை வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. பூக்களை பறிக்காமல் விட்டுவிட்டால் செடிகள் அழுகிவிடும். எனவே தான் 2 நாட்களுக்கு ஒருமுறை பூக்களை பறித்து கீழே கொட்டுகிறோம். பூக்கள் விற்பனை ஆகாததால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பூக்கள் சாகுபடிக்காக நாங்கள் வங்கிகளில் பெற்ற கடனையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே பூக்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கான வங்கி கடனை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதுடன், நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story