தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடிய 4 பேர் கைது
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 24-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
அதன்படி தூத்துக்குடி வ.உ.சி. காய்கனி மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கடையில் ரத்தக்கறையுடன் கூடிய கால்தடம் இருந்தது. இதனால் காலில் சமீபத்தில் காயம் ஏற்பட்டு யாரேனும் சிகிச்சை பெற்று உள்ளார்களா? என்று விசாரணை நடத்தினர். அதன்பேரில் தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சார்லஸ் (வயது 30) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சார்லஸ் தனது நண்பர்களான தூத்துக்குடி வண்ணார்தெருவை சேர்ந்த அந்தோணிதாசன் மகன் அந்தோணி (33), ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த செபஸ்டின் மகன் மைக்கேல்ராஜ் (39), முனியசாமிபுரத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் பிரவின் (30) ஆகியோருடன் சேர்ந்து மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
வாக்குமூலம்
அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2 வாரங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. இதனால் போதைக்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் வேண்டும் என்று கேட்டோம். அப்போது, கடைக்காரர் 2 விதமான மாத்திரைகளை தந்தார். ஆனால் அதில் திருப்தி இல்லாததால் டாஸ்மாக் கடையில் திருடினோம் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story