நெல்லை, தென்காசியில் பெண்கள் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா - புளியங்குடி நகருக்கு ‘சீல்’ வைப்பு


நெல்லை, தென்காசியில் பெண்கள் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா - புளியங்குடி நகருக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 19 April 2020 4:30 AM IST (Updated: 19 April 2020 12:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெண் கள் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிக பேர் பாதிக்கப்பட்ட புளியங்குடி நகரம் ‘சீல்‘ வைக்கப்பட்டது.

புளியங்குடி, 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கானோரை தாக்கி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 22 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலப்பாளையத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி மற்றும் அவருடைய தாயார் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா பரவி உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

இவர்களில் 15 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று தொற்று கண்டறியப்பட்ட 4 பேரும் புளியங்குடியை சேர்ந்தவர்கள்தான். இங்குள்ள வாபா தெருவில் இருந்து அகஸ்தியர் கோவில் தெருவுக்கு கொரோனா வைரஸ் பரவியது. தற்போது அதன் அருகில் உள்ள முத்து தெருவுக்கும் கொரோனா பரவி உள்ளது. இந்த தெருவில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உள்ளது. தற்போது இவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என 4 பேருக்கு கொரோனா தொற்றி இருப்பது அந்த பகுதி மக்களை பீதியடைய செய்து உள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் நேற்று உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புளியங்குடிக்கு ‘சீல்’

புளியங்குடி கொரோனா பாதிப்புக்குள்ளான நகரமாக மாறி உள்ளது. இதன் காரணமாக புளியங்குடி நகரத்துக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து தெருக்களும் மூடப்பட்டு பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோர் குடியிருக்கும் 4 தெருக்கள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளது. அங்கிருந்து யாரும் வெளியே வரவும், உள்ளே செல்லவும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த தெருக்களில் இருபுறமும் போலீசார் நின்று 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட 4 தெருக்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நகராட்சி பணியாளர்கள் வாங்கி அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்குகிறார்கள். இதேபோல் மற்ற தெருக்களிலும் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

புளியங்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புளியங்குடியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு முகாமிட்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுகாதார பணிகள்

மேலும், கொரோனா பாதிப்பு உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், தூய்மை இந்தியா பணி மேற்பார்வையாளர் விஜயராணி தலைமையில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story