பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதிய செல்போன் செயலி - நெல்லை மாநகர போலீசார் அறிமுகம் செய்தனர்
நெல்லையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதிய செல்போன் செயலியை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.
நெல்லை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதையும் மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு, அபராதம், வாகனம் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய செயலி
அதையும் மீறி வெளியே வந்து செல்பவர்களை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை மாநகர போலீசார் ஸ்மார்ட் சி.ஓ.பி என்ற புதிய செல்போன் செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளனர்.
இதன் செயல்பாட்டை நெல்லை சந்திப்பு அண்ணா சிலை சோதனை சாவடி அருகே மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதுகுறித்து துணை கமிஷனர் சரவணன் கூறியதாவது:-
வெளியே வருவோரின் வாகன எண், செல்போன் எண், ஓட்டுனர் உரிமம் எண் அல்லது ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண் ஆகியவற்றில் ஒன்றை புதிய செயலியில் போலீசார் பதிவு செய்வார்கள். இதன் மூலம் அவர்களது முகவரியை ஜி.பி.எஸ். கருவி மூலம் செயலி தானாகவே எடுத்துக் கொள்ளும். பிடிபட்ட நபரின் வாகனம் மற்றும் உருவத்தை புகைப்படம் எடுத்து அதில் பதிவு செய்யப்படும்.
அந்த நபர் 2 கிலோமீட்டரை தாண்டி வேறு ஒரு இடத்தில் போலீசாரிடம் பிடிபடும் போது, அவரது வாகன எண்ணை பதிவு செய்த உடன் மாட்டிக் கொள்வார். பின்னர் அவர் மீது வழக்கு, வாகனம் பறிமுதல், அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த குறுந்தகவல் அவரது செல்போன் எண்ணுக்கு உடனடியாக சென்று விடும். எனவே தவறான தகவல்களை தெரிவித்து விட்டு வெளியே நடமாடினால், இந்த செயலி மூலம் சிக்கிக் கொள்வார்கள்.
எனவே அவசிய தேவையின்றி பொது மக்கள் வெளியே வரவேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேனரும், கொரோனா போன்ற உருவ பொம்மையும் அமைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story