கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வியாபாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவிப்பு


கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வியாபாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2020 4:16 AM IST (Updated: 19 April 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வியாபாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலேயே காய்கறி வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வளாகப் பகுதிக்கு வரும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மார்க்கெட் பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்க்கெட் வளாகத்துக்குள் காய்கறி மற்றும் பூக்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வரும் வியாபாரிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல், காலை 4 மணி முதல் காலை 7.30 மணிக்குள் தங்களுடைய வாகனங்களில் வந்து காய்கறி மற்றும் பூக்களை வாங்கி செல்ல வேண்டும். கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகத்தில் காலை 7.30 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் வந்து காய்கறி, பூக்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க வரும் நபர்களுக்கு அனுமதி இல்லை.

இதை மீறி மார்க்கெட் வளாகத்துக்குள் வருபவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும். 3 மற்றும் 4 சக்கர சரக்கு வாகனங்களை கொண்டு காய்கறிகளை வாங்க வரும் வியாபாரிகளுக்கு இந்த நேரக்கட்டுப்பாடு இல்லை. மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்காடிக்கு உள்ளே செல்லும் போது கைகளை சுத்தமாக கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.

கோயம்பேடு காய்கறி அங்காடி பகுதியில் சுமார் 10 ஆயிரம் மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story