தனுஷ்கோடியில் கடல் சீற்றம்


தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
x
தினத்தந்தி 19 April 2020 4:45 AM IST (Updated: 19 April 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதியானது இயற்கையாகவே கடல் நீரோட்டம் மற்றும் கடல் அலை வேகமாக உள்ள பகுதியாகும்.

கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் முதல் கம்பிப்பாடு அரிச்சல்முனை வரையிலான சாலை மற்றும் கடற்கரை பகுதியானது வெறிச்சோடி கிடக்கிறது.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. கடல் அலைகளும் உயரமாக எழும்புகின்றன. இதனால் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது அலை மோதி கடல் நீரானது பல அடி உயரத்திற்கும் மேல் நோக்கி எழுந்து சிதறுகின்றன.

இதனால் கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட பகுதியில் தடுப்பு சுவரின் கற்கள் சரியாமல் இருக்க கட்டப்பட்ட பிளாஸ்டிக் கயிறுகள் அறுந்தும், கற்கள் கடலில் விழுந்தும் வருகின்றன.

தடுப்பு சுவர் சேதமாவதும் மணலால் சாலைகள் மூடப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆகவே ஊரடங்கு முடிந்து சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படும் முன்பு தனுஷ்கோடி பகுதியில் சேதமான தடுப்பு சுவரை தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story