ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தம்: 92 வயது தாயை பார்க்க 250 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 58 வயது ஆட்டோ டிரைவர்
ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தாராசுரத்தில் உள்ள தனது 92 வயது தாயை பார்ப்பதற்காக மதுரையில் இருந்து 250 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்து வந்தார் 58 வயது ஆட்டோ டிரைவர்.
கும்பகோணம்,
ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தாராசுரத்தில் உள்ள தனது 92 வயது தாயை பார்ப்பதற்காக மதுரையில் இருந்து 250 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்து வந்தார் 58 வயது ஆட்டோ டிரைவர். பாசத்தில் இருவரும் கட்டியணைத்து உச்சிமுகர்ந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
ஆட்டோ டிரைவர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஜெயகாந்தன்(வயது 58). நெசவு தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக நெசவுத்தொழில் நலிவடைந்ததால் ஜெயகாந்தன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை அடுத்த விளாங்குடிக்கு குடும்பத்துடன் சென்றார்.
அப்போது அவர் தனது தாய் நன்னபையை(92) தாராசுரத்திலேயே விட்டு சென்றார். மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் ஜெயகாந்தன் ஒவ்வொரு மாதமும் தவறாமல் தனது தாயை தாராசுரம் வந்து பார்த்து விட்டு செலவிற்கு பணம் கொடுத்து செல்வார்.
போக்குவரத்து முடக்கம்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பஸ், ரெயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெயகாந்தன் தனது தாயை பார்க்க முடியாமல் தவித்து வந்தார். வயதான காலத்தில் தாயார் பணம், காசு இல்லாமல் என்ன செய்கிறாரோ? என தவித்த அவர் எப்படியாவது தனது தாயாரை பார்க்க வேண்டும் என முடிவு செய்தார்.
இதையடுத்து மதுரையை அடுத்த விளாங்குடியில் இருந்து தாராசுரத்திற்கு சைக்கிளில் வருவதென முடிவு செய்தார். ஆனால் வரும் வழியில் போலீசார் தடுத்தால் என்ன செய்வது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். பின்னர் அவர் தனது சைக்கிள் பயணத்திற்கு அதிகாலை நேரத்தை தேர்வு செய்தார். 250 கிலோ மீட்டர் தூரம் பயணம் என்பதால் தனக்கு தேவையான உணவு, உடை, குடிக்க தண்ணீர் ஆகியவற்றை சைக்கிளில் கட்டிக்கொண்டார்.
சைக்கிளில் புறப்பட்டு வந்தார்
கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு சைக்கிளில் புறப்பட்டார். அவ்வப்பொழுது தனது குடும்பத்தினருக்கு கும்பகோணம் வரும் பாதையில் உள்ள ஊர்களை செல்போன் மூலம் தகவல் தெரிவித்தபடியே வந்தார். வழியில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது சைக்கிளை தடுத்தனர். அவர்களிடம் ஜெயகாந்தன் தனது தாயின் நிலையையும், அவரது வயோதிகத்தையும் விளக்கி கூறியபடியே வந்தார். அதைக்கேட்டு மனம் உருகிய போலீசார் அவரது தாய் பாசத்தை பெரிதும் பாராட்டி தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். அவர்களில் சிலர் அவருக்கு தேவையான உணவுகளை வரவழைத்து சாப்பிட வைத்து அனுப்பினர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது பயணத்தை தொடர்ந்தார். தனது 43 மணி நேர சைக்கிள் பயணத்தில் மதுரையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தை 17-ந் தேதி இரவு 10 மணிக்கு வந்தடைந்தார். அவரை, அவரது பகுதியை சேர்ந்த சவுராஷ்டிர சமூகத்தினர் வரவேற்றனர்.
பாசத்தில் கட்டித்தழுவினர்
பின்னர் வீட்டுக்குள் ஓடிச் சென்ற ஜெயகாந்தன் தாயை பார்த்ததும் கட்டித்தழுவினார். அவரது தாயும் அவரை உச்சிமுகர்ந்தார். தாயும், மகனும் பாசத்தை பரிமாறிக்கொண்டனர். எத்தனை வயதானாலும் தாய்- மகனின் பாசப்பிணைப்பு ஈடு இணை இல்லாதது என்பது இவர்களது சந்திப்பின் மூலம் நிரூபணமானது. தாய்-மகனின் இந்த பாசக்காட்சியை நேரில் பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் சைக்கிள் ஓட்டி வந்ததால் தனக்கு ஏற்பட்ட உடல் வலி தாயை பார்த்த மாத்திரத்தில் ஜெயகாந்தனுக்கு ஓடிப்போனது. தாய் பாசமே அனைத்திலும் வலிமையானது என்பதை நிலைநிறுத்திய ஜெயகாந்தனை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று சந்தித்து பாராட்டினர்.
Related Tags :
Next Story