கொரோனா நெருக்கடியில் எதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ராகுல்காந்தி உதாரணமாக திகழ்கிறார் - சிவசேனா பாராட்டு
கொரோனா பிரச்சினையால் ஏற்பட்டு உள்ள நெருக்கடியில் எதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ராகுல்காந்தி உதாரணமாக திகழ்கிறார் என்று சிவசேனா பாராட்டி உள்ளது.
மும்பை,
கொரோனா வைரஸ் பிரச்சினையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சிவசேனா பாராட்டி உள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராகுல்காந்தி பற்றி சில கருத்துகள் இருக்கலாம். அதேபோல பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா பற்றியும் கருத்துகள் உள்ளன. பாரதீய ஜனதாவின் வெற்றியில் பாதி ராகுல்காந்தியின் புகழை கெடுப்பதன் காரணமாகும். அது இன்றும் தொடர்கிறது.
ஆனால் தற்போதைய நெருக்கடியில் ராகுல்காந்தி எடுத்த நிலைப்பாட்டை பாராட்ட வேண்டும். நாடு நெருக்கடியை சந்திக்கும் போது எதிர்க்கட்சி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமான நடத்தை விதிகளை அவர் உருவாக்கி உள்ளார்.
ராகுல்காந்தி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்கூட்டியே நன்கு உணர்ந்தார். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தொடர்ந்து அரசை எச்சரித்தார். எல்லோரும் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பறிப்பதில் மும்முரமாக இருந்த போது, கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க ராகுல்காந்தி அரசாங்கத்தை தட்டி எழுப்ப முயன்றார்.
நேரில் பேசவேண்டும்
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தும்படி பலமுறை வலியுறுத்தினார்.
பிரதமருடன் தனக்கு வேறுபாடு இருக்கலாம். ஆனால் இது சண்டையிடுவதற்கான நேரம் அல்ல. இந்த நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். சண்டையிட்டால் அதில் வெற்றி பெற மாட்டோம் என மீண்டும் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.
எனவே நாட்டின் நன்மைக்காக கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக ராகுல்காந்தியும், பிரதமர் மோடியும் ஒருமுறை நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story