1.63 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்


1.63 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 April 2020 5:34 AM IST (Updated: 19 April 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில்1.63 கோடிஅமைப்புசாரா தொழிலாளர்களுக்குதலாரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு காங்கிரசின் ஆதரவு உண்டு. ஆனால் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன பழுதுநீக்கும் தொழிலாளர்கள், உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், கல் உடைக்கும் தொழிலாளர்கள், நெசவாளர்கள், சலவை தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், சரக்கு லாரிகளில் சரக்குகளை ஏற்றி, இறக்குபவர்கள் என 1.63 கோடி அமைப்புசாரா தொழிலளார்களின் வாழ்க்கை மிச மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் பிரதமர் மோடியோ அல்லது முதல்-மந்திரி எடியூரப்பாவோ அந்த தொழிலாளர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை, எந்த உதவியும் செய்யவில்லை. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் ஒரு குழு முதல்-மந்திரியை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். மத்திய-மாநில அரசுகள் அறிவித்த உதவிகளும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு போய் சேரவில்லை.

தலாரூ.10 ஆயிரம் உதவித்தொகை

நாங்கள் இதுவரை அரசை குறை கூறவில்லை. நெருக்கடியான தருணத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது சரியாக இருக்காது என்று கருதி அமைதியாக இருந்தோம். ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை கண்டு அமைதியாக இருக்க முடியாது. அமைப்புசாரா தொழிலாளர்களை மத்திய-மாநில அரசுகள் மொத்தமாக புறக்கணித்துவிட்டன. அந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

வளர்ச்சி பணிகளை நிறுத்தி இந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள். இதுகுறித்து ஆலோசிக்க எடியூரப்பா மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அல்லது சட்டசபை கூட்டத்தை கூட்டுங்கள். இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புகிறேன். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளி, பழங்களை அப்படியே நிலத்திலேயே அழித்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

அந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து அரசு ஆய்வு நடத்தி முடிவு எடுக்க வேண்டும். கொரோனா குறித்து சுகாதாரத்துறை மந்திரி பேச முடியாத நிலையில் உள்ளார். கொரோனா பரிசோதனைகள் குறைவாக நடக்கின்றன. இந்த பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இதை நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏன் வழங்கவில்லை. அவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story