நாளை மறுநாள் முதல் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் நாளை மறுநாள் (21-ந் தேதி) முதல் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதாவது கட்டுமான பணிகளுக்கு தடை இல்லை, தொழிற்சாலைகள் செயல்படும், சரக்கு வாகன போக்குவரத்துக்கு தடை நீக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகத்தில் இதுவரை 370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 14 பேர் இந்நோய் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுப்பது குறித்து மூத்த மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் முதல்- மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது பற்றியும், 20-ந் தேதிக்கு(நாளை) பிறகு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஊரடங்கை சிலர் மீறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ள (அதாவது கட்டுப்படுத்தப்பட்ட) பகுதிகளில் அந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க, தனி அதிகாரியை நியமித்து, அவருக்கு மாஜிஸ்தி ேரட்டுக்குரிய அதிகாரம் வழங்கப்படும்.
அத்தியாவசிய பொருட்கள்
அத்துடன் அவருக்கு உதவியாக சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைக்கப்படும். அந்த குழுவினர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அத்தகைய பகுதிகளில் ஊரடங்கை மேலும் தீவிரமாக அமல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் யாரும் வெளியே வர அனுமதி கிடையாது.
அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கப்படும். இந்த பணிகளை அந்த குழுவினர் மேற்கொள்வார்கள். கொரோனா பாதித்த பகுதியை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் தீவிரமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். அங்கு அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பயணிக்க அனுமதி கிடையாது
கர்நாடகத்தில் 20-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை தளர்த்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து, பிற பகுதிகளில் சரக்கு வாகனங்கள், ஏற்கனவே பாஸ் பெற்றுள்ள கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் மாவட்டங் களுக்கு இடையே பயணிக்க அனுமதி கிடையாது. தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். முடிந்தவரை அந்த நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உற்பத்தி தொழில் நிறுவனங்கள், நகரங்களில் தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி, பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், ராமநகர் மாவட்டங்கள் ஒரே மாவட்டமாக கருதப்படும். இதன் மூலம் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்ல வழிவகை செய்யப்படுகிறது.
சமூக விலகல் கட்டாயம்
கட்டுமான தொழில்கள் அனுமதிக்கப்படும். ஆனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதே இடத்தில் தங்க தேவையான வசதிகளை நிறுவனங்கள் செய்து கொடுக்க வேண்டும். வேறு எந்த கடைகளோ அல்லது வணிக வளாகங்களோ திறக்க அனுமதி இல்லை. 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். அவர்கள் அரசு ஒப்பந்தம் செய்யும் பஸ்களில் பணிக்கு வர வேண்டும்.
மூத்த குடிமக்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது. வீட்டில் இருந்து வெளியே வரும் அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். எல்லா இடங்களிலும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மே மாதம் 3-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.”
இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
அவசர ஆலோசனை
முதலில் 20-ந் தேதிக்கு (நாளை) பிறகு இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து இருந்தார். ஆனால் இரு சக்கர வாகனங்களை அனுமதித்தால் அது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா, அவசர ஆலோசனை நடத்தினார். அதில் இருசக்கர வாகனங்களுக்கான தடையை தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அந்த ஆலோசனைக்கு பிறகு எடியூரப்பா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனுமதி வாபஸ்
கர்நாடகத்தில் இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற பணிகளை வீட்டில் இருந்தபடி பணியாற்றும் கொள்கை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story