ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம்: சென்னையில் இருந்து குமரிக்கு வந்த என்ஜினீயர்கள்
ஊரடங்கை மீறி சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் குமரிக்கு வந்த என்ஜினீயர்கள் போலீசில் சிக்கினர்.
ஆரல்வாய்மொழி,
ஊரடங்கை மீறி சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் குமரிக்கு வந்த என்ஜினீயர்கள் போலீசில் சிக்கினர். பசி, பட்டினியுடன் நாட்களை கழித்ததாக உருக்கமாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனாவிடம் இருந்து மக்களின் உயிரை காப்பாற்ற நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமர் மோடி பிறப்பித்தார். மக்களை தனிமைப்படுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதற்காக இந்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
21 நாட்களாக இருந்த ஊரடங்கு, தற்போது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உள்ளது. இதனை பொதுமக்களும் கஷ்டப்பட்டு பின்பற்றி வருகிறார்கள். அதே சமயத்தில், சொந்த ஊரில் இருந்து பிழைப்புக்காக வெளியூர் சென்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள் படும் சிரமம் சொல்லி மாளாது. கையில் இருந்த பணம் முழுவதையும் செலவழித்ததோடு, உணவுக்காக பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சொந்த ஊருக்கு படையெடுப்பு
அவ்வாறு இருப்பவர்களில் சிலர் என்ன நடந்தாலும் சரி, இனி சொந்த ஊருக்கு கிளம்பி விட வேண்டியது தான் என்ற மனநிலையில் ஊரடங்கை மீறி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தபடி கிளம்புவதும், இடையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கும் சம்பவமும் தொடர்ச்சியாக நிகழ்கிறது.
அந்த வகையில், தென்கோடி மாவட்டமான குமரியில் இருந்து சென்னைக்கு பிழைப்புக்காக சென்றவர்கள், தற்போது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். இதேபோல் நேற்று 2 பேர் பசி, பட்டினியுடன் ஊர் வந்து சேர்ந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
பசி, பட்டினியுடன் வாடினர்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம், குளத்தாங்கரை விளையை சேர்ந்தவர்கள் விபின் (வயது 22), ரெதீஸ் (27). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக வேலை பார்த்தனர். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். அங்கு மேலும் சிலரும் அவர்களுடன் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் விபின், ரெதீஸ் ஆகிய 2 பேரும் இருக்கின்ற பணத்தை வைத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதற்கிடையே அவர்களுடன் தங்கியிருந்த மற்றவர்கள், அருகில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அதன்பிறகு ஒவ்வொரு நாளையும் கஷ்டப்பட்டு கழித்த விபின், ரெதீசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. அதாவது, சமைக்க பயன்படுத்திய சிலிண்டர் காலியானது. இதனால் ஒரு வேளை உணவுக்காக அலைந்தனர். மேலும் சில வேளைகளில் பசி, பட்டினியுடன் வாடினர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், இனிமேல் சொந்த ஊருக்கு கிளம்பி விட வேண்டியது தான் என முடிவெடுத்த அவர்கள், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
பரிசோதனை
வரும் வழியில் 3 இடங்களில் போலீசார் இருவரையும் வழிமறித்து எச்சரித்துள்ளனர். அதே சமயத்தில், பசி, பட்டினியுடன் இருப்பதை அறிந்து கவனமுடன் செல்லுங்கள் என அறிவுரைகூறி அனுப்பி வைத்துள்ளனர். இறுதியாக ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு வந்த போது, அவர்கள் போலீசாரிடம் சிக்கினர்.
பின்னர் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி டாக்டர் ஜெனிபர், சுகாதார ஆய்வாளர் அன்வர் அலி ஆகியோர் வந்து இருவருக்கும் கொரோனா அறிகுறி ஏதேனும் இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர். அதற்கான அறிகுறி எதுவும் இல்லை. எனினும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story