கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் புதிய பணி நியமனமா? தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்


கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் புதிய பணி நியமனமா? தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2020 7:43 AM IST (Updated: 19 April 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் புதிய பணி நியமன உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நாளை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள்.

திருச்சி, 

கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் புதிய பணி நியமன உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நாளை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள். இதனால், விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்கள்

தமிழகம் முழுவதும் சுமார் 4,400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் இந்த கூட்டுறவு சங்கங்களின் மூலம் நகை கடன், விவசாயிகளுக்கு உரம் வழங்குவது, ரேஷன் கடைகள் நடத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

வைப்புத்தொகை சேகரிப்பு மற்றும் நிலுவையில் உள்ள இருப்பு தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்துக்கும் மேலாண்மை இயக்குனர் என்ற ஒரு புதிய பணி இடத்தை நியமித்து அவர்களுக்கான சம்பளத்தையும் அந்தந்த கூட்டுறவு சங்கங்களே வழங்கவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு

இந்த சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 3 கட்டவேலை நிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாகவும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளருக்கு அனுப்பி உள்ள ஒரு கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் மக்கள் மடிந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு இந்திய அரசும், தமிழக அரசும் மக்களை பாதுகாக்க சீரிய முறையில் செயலாற்றி வருகின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் மேலாண்மை இயக்குனர் நியமனம் செய்யப்படவேண்டும் என்ற பதிவாளரின் உத்தரவு நிர்வாக ரீதியாக பல குழப்பங்களையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தி விடும் என்பதால் பதிவாளரின் உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நாளை வேலை நிறுத்தம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை(திங்கட்கிழமை) அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது, மே 1-ந் தேதி முதல் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்துக்கு புள்ளி விவரம் அனுப்புவதை புறக்கணிப்பது, அதன் பின்னரும் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு பாதிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் கிராமப்புறங்களில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவது, வேளாண் பணிகளுக்கு தேவையான உரம் வினியோகம் செய்வது போன்ற பணிகளை தங்கு தடையின்றி செய்து வருகின்றன. தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினால் இந்த பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Next Story