நாமக்கல்லில், வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் - சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்லில் வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாமை சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் முனியநாதன், அபய்குமார் சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தில் கட்டுமான பணிக்காக வந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிய மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் தொழிலாளர்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளதா? என்பதை கேட்டறிந்த மருத்துவக்குழுவினர், அவர்களின் உடல்நிலை வெப்பத்தையும் பரிசோதித்தனர்.
இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் முனியநாதன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தொழிலாளர்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் குறித்து மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தனர். பின்னர் தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் தொகுப்பினை சிறப்புக்குழு அலுவலர்கள் வழங்கினர்.
தொடர்ந்து, நாமக்கல் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களை சுற்றி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டு உள்ளதை சிறப்புக்குழு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நாமக்கல்லில் திருச்சி சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதையும், வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படுகிறதா? என்பதையும் கேட்டறிந்தனர்.
முன்னதாக, பரமத்தியில் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டதா? என்பதையும் பரமத்திவேலூரில் உள்ள இந்தியன் வங்கியில் கிருமிநாசினி வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story