குளித்தலையில் வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க வாகனங்களில் அடையாளமிடும் போலீசார்
குளித்தலையில் வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க வாகனங்களில் போலீசார் அடையாள குறியிடுகின்றனர்.
குளித்தலை,
குளித்தலையில் வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க வாகனங்களில் போலீசார் அடையாள குறியிடுகின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்
கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்த நாளில் இருந்து குளித்தலையில் போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் மாவட்ட எல்லை மட்டுமின்றி நகரப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து விசாரித்து என்ன தேவைக்காக அவர்கள் செல்கின்றனர் என்று கேட்டு தெரிந்துகொள்கின்றனர். அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போதுவரை சுமார் 202 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குகள் பதிவு செய்தும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்தும் உள்ளன.
அடையாள குறியிடு
போலீசார் தினமும் வழக்குகள் பதிந்தாலும் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளனர். இதனை தடுக்கும் வகையில் வாகனங்களில் பெயிண்டினால் அடையாள குறியிடும் நடவடிக்கையை குளித்தலை போலீசார் நேற்று முதல் மேற்கொண்டுள்ளனர். அதன்படி குளித்தலை பகுதியில் அத்தியாவசிய மற்றும் அவசிய தேவைக்காக செல்பவர்களை தவிர்த்து, தேவையற்ற வகையில் அடிக்கடி சாலையில் பயணிப்பவர்களை பிடித்து விசாரித்து, அவர்களின் வாகனங்களில் மட்டும் சிவப்பு நிற பெயிண்டினால் அடையாள குறியிட்டு, அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த வாகனத்தில் பயணிக்கக்கூடாதென எச்சரித்து அனுப்பிவைத்தனர். சுழற்சி முறையில் 3 நிறங்கள் கொண்ட பெயிண்டுகள் குறியிட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்றும், அதைமீறி வாகனங்களில் பயணிப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் தெரிவித்தனர்.
குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரே வாகனங்களில் போலீசார் பெயிண்டினால் அடையாள குறியிட்டதை குளித்தலை போலீஸ் துணைசூப்பிரண்டு கும்மராஜா பார்வையிட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறினார்.
Related Tags :
Next Story