தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நாளை தொடக்கம் - கலெக்டர் அருண் தகவல்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.256 என ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்தார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 18 பேர் கொரோனா பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டனர். அதன்படி மொத்தம் 22 பேரும் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,383 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 14,677 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13-ந் தேதி நள்ளிரவு கர்ப்பிணியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்த போலீஸ்காரர்களுக்கு வெகுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள 3 ஊரக வளர்ச்சி வட்டாரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாளை (திங்கட்கிழமை) முதல் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இந்த திட்ட நிர்வாக நிதியில் இருந்து தேவையான முக கவசம், கிருமி நாசினி வாங்கப்பட்டு திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் அடுத்த வாரம் முதல் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1-ந் தேதி முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.229-ல் இருந்து ரூ.256 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது நடப்பு நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story