லாலாப்பேட்டை அருகே, பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது


லாலாப்பேட்டை அருகே, பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2020 12:21 PM IST (Updated: 19 April 2020 12:21 PM IST)
t-max-icont-min-icon

லாலாப்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

சிப்காட் போலீசார் சீக்கராஜபுரம் அவுசிங் போர்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சிலர் உட்கார்ந்து பேசிகொண்டிருந்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை பிடிக்க போலீசார் சென்றபோது ஒருவர் தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் சீக்கராஜபுரம் மோட்டூரை சேர்ந்த யுவராஜ் (வயது 26), திருவலத்தை சேர்ந்த அரவிந்தன் (20), சீக்கராஜபுரம் பல்லவர் நகரை சேர்ந்த வாசு (20) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 3 பேரும் கடந்த மாதம் லாலாப்பேட்டை அருகே சைக்கிளில் சென்ற வள்ளி என்ற பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகையை பறித்து சென்றவர்கள் என்பதும், தப்பி ஓடியவர் சீக்கராஜபுரம் பல்லவர் நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (30) என்பதும் தெரிய வந்தது.

ஜெயபிரகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாலாப்பேட்டை அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து யுவராஜ், அரவிந்தன், வாசு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஜெயபிரகாசை தேடி வருகின்றனர்.


Next Story