ஊரடங்கால் பறிக்க முடியாத நிலை நுங்குகள் பனை மரத்திலேயே முற்றிவிடும் அவலம்
கொரோனா தொற்று ஊரடங்கால் பனை நுங்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்றுப்புற கிராமங்களான கொத்தப்பல்லி, பல்லல குப்பம், கார்க்கூர், செண்டத்தூர், பொகளூர், ஆலாங்குப்பம், பரவக்கல், பாலூர் மற்றும் ஆம்பூர் பகுதியிலுள்ள மிட்டாளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
கிராமப்புறங்களில் இந்தத் தலைமுறையில் ஒரு பனைமர விதை நடவு செய்தால் அடுத்த தலைமுறையில் தான் பனை மரத்தின் வளர்ச்சியை, அதாவது 100 ஆண்டுகளில் தான் காண முடியும் என்பது பழமொழியாக கூறுவார்கள். பொதுவாக ஆண்டின் கோடைக்காலமான ஏப்ரல் மாதத்தில் நுங்கு சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரை கிடைக்கும்.
நுங்கு உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. நீர் சத்தை உள்ளடக்கியது. கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தால் ஏற்படும் சின்னம்மை, அரிப்பு ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது. அதுமட்டுமின்றி உடல் சம்பந்தமான நோய்களை தீர்க்கக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்தது. பனை மரத்தில் ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் நுங்கு வரை கிடைக்கும்.
நுங்கு வியாபாரத்தை வாழ்வாதாரமாக நம்பி சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் சீசன் நேரத்தில் ஒரு பனை மரத்தை நுங்கு சீசன் நேரத்தில் ரூ.200க்கு குத்தகைக்கு வாங்கி, அதை மற்ற வியாபாரிகளிடம் ரூ.800 வரை விற்று லாபம் பெறுவார்கள். அதன் மூலம் வியாபாரிகள் சீசன் நேரத்தில் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை வியாபாரம் செய்து லாபம் ஈட்டி பயன் அடைந்து வருகின்றனர்.
நுங்கை கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கர்நாடக மாநிலம் மைசூரு, தாவண்கரே, பெங்களூரு, கோலார், கே.ஜி.எப், ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்காக லாரிகள், ரெயில்கள் மூலமாக அனுப்பி வந்தனர். தற்போது கொரோனோ வைரஸ் பரவி வருவதால் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் யாரும் பனை மரம் ஏற முன் வராததாலும், ஊரடங்கு அமலில் இருப்பதாலும் நுங்கு மரத்திலேயே முற்றும் நிலையில் உள்ளது.
இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பனை நுங்கு ஏற்றுமதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பனை மரம் ஏறும் தொழிலாளர்கள், வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story