முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் - கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
சென்னை மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்தநிலையில் சென்னை மண்ணடியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ எனப்படும் நவீன துரித பரிசோதனை கருவி மூலமாக கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதனை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னை முழுவதும் தொற்று நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அறிகுறி உள்ளவர்கள், நேரடியாக மக்கள் தொடர்பில் உள்ள காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு இந்த நவீன துரித பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கூடுதலாக தேவைப்படுகிறது. அதனை நாங்கள் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83 பேர் குணமடைந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். வீடு வீடாக ஆய்வு செய்யும் மாநகராட்சி ஊழியர்களிடம், பொதுமக்கள் தங்களுக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகளை மறைக்காமல் சொல்ல வேண்டும்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் ஆகிய 2 மண்டலங்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலும், அங்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ‘ரேபிட்’ பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். கொரோனா தொற்று இல்லை என்றால் குறுஞ்செய்தி அனுப்பப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தன்னார்வலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை, எளியவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் தன்னார்வலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
* மண்டல அலுவலர், உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு வழங்கும் இடத்தினை ஆய்வு செய்து அவ்விடம் உணவு வழங்க உகந்த இடம் என கண்டறியப்பட்ட பின்னர் தான் உணவு வழங்க வேண்டும்.
* அரசால் தடை செய்யப்பட்ட பகுதி (தொற்று நோய் கட்டுப்படுத்தும் மண்டலம்) என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்கக்கூடாது.
3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி
* உணவு வழங்குமிடத்தில் ஓட்டுநர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி/தன்னார்வ அமைப்பு/அரசு சாரா அமைப்புகள்/குழுவினர் உள்பட 3 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
* உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில், 3 நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது.
* உணவு வழங்கும் போது, சமூக இடைவெளியினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
* இவை தவிர, அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் உணவு வழங்குதல் குறித்து அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளையும் உணவு வழங்கவுள்ள அமைப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story