தர்மபுரியில் ஊரடங்கு உத்தரவு: தினமும் 4 ஆயிரம் தொழிலாளர்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம் - சமூக இடைவெளியை கடைபிடித்து சாப்பிட்டு செல்கின்றனர்
ஊரடங்கு உத்தரவையொட்டி தர்மபுரியில் தினமும் 4 ஆயிரம் தொழிலாளர்களின் பசியை தீர்க்க அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் உணவு சாப்பிட்டு செல்கின்றனர்.
தர்மபுரி,
தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டது. இந்த உணவகங்களில் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மதிய நேரத்தில் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் என குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தர்மபுரி பகுதியில் டவுன் பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி நகராட்சி இந்த உணவகங்களை நிர்வகித்து வருகிறது. சுழற்சி முறையில் மகளிர் குழுக்களை சேர்ந்த 24 பெண்கள் தினமும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தரமான உணவு இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதை பஸ் நிலையத்திற்கு தினமும் வரும் தொழிலாளர்கள், பொதுமக்களும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மபுரி பகுதியில் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் உணவில்லாமல் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு தர்மபுரி நகராட்சி நிர்வாகம் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. மற்ற மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இரவு நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை. ஆனால் தர்மபுரியில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேரத்திலும் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காலை நேரத்தில் சுழற்சி முறையில் இட்லி அல்லது பொங்கல், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவையும், இரவு நேரத்தில் சுழற்சி முறையில் இட்லி அல்லது உப்புமா வழங்கப்படுகிறது. இங்கு தினமும் பொதுமக்கள், தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேர் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் காத்திருந்து பசிதீர்த்து செல்கின்றனர். பாத்திரம் கொண்டு வரும் பொதுமக்களுக்கு வீட்டிற்கு பார்சலும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story