ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் நடமாடும் கடைகள்


ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் நடமாடும் கடைகள்
x
தினத்தந்தி 20 April 2020 5:01 AM IST (Updated: 20 April 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்களின் வருமானத்தை ஈட்டித்தரும் வகையில் நடமாடும் கடைகள் அமைந்துள்ளன.

குத்தாலம், 

ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்களின் வருமானத்தை ஈட்டித்தரும் வகையில் நடமாடும் கடைகள் அமைந்துள்ளன.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் இருந்து மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காய்கறி, மளிகை கடைகள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குறித்த நேரத்தில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஊரடங்கு என்பதே மக்கள் நடமாடக்கூடாது என்பது தான் நோக்கம். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்போது குறிப்பிட்ட சில நாட்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நடமாடும் கடைகள்

ஊரடங்கு காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் விளைவிக்கப்பட்ட தானியங்களும், காய்கறிகளும் விற்பனை செய்ய வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு துறையினர் வாங்கி சரக்கு ஆட்டோ, தள்ளுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் நடமாடும் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சரக்கு ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் நடமாடும் காய்கறி மற்றும் தானியங்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமான இழப்பை, நடமாடும் கடைகள் அமைத்ததன் மூலம் ஈடுகட்டி வருகின்றனர். தற்போது நடமாடும் கடைகளுக்கும் அதிக போட்டிகள் உருவாகி விட்டன. இதனால் ஒரு தெருவுக்கு இரண்டு நடமாடும் கடைகள் வரை தென்படுகின்றன.

இந்த போட்டியின் காரணமாக காய்கறிகளின் விலையும் நியாயமாக உள்ளதாக குடும்ப பெண்கள் பலர் தெரிவிக்கின்றனர். பெண்கள் வெளியே வரும் தேவையும் குறைந்து விட்டது.

நல்ல வரவேற்பு

இதுகுறித்து நடமாடும் காய்கறி கடை வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஆட்டோ டிரைவர்கள், கடைகளில் வேலைபார்ப்பவர்கள் பலர் தற்போது நடமாடும் கடைகள் அமைத்து வருமானம் ஈட்டி குடும்ப செலவினங்களை சரிசெய்து வருகின்றனர். தற்போதைய சூழலில் அசைவ மோகம் குறைந்து பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

சத்தான உணவு தேவை என்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் அதிக அளவில் காய்கறி உணவுகளையே பொதுமக்கள் விரும்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டு வாசலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதால் நடமாடும் கடைகளுக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வகையில் நடமாடும் கடை அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story