உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம்: கவர்னர் மீது சஞ்சய் ராவத் கடும் தாக்கு - ‘ராஜ்பவன் அரசியல் சதியின் கூடாரமாக கூடாது’
உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், ராஜ்பவன் அரசியல் சதித்திட்ட கூடாரமாக மாறக்கூடாது என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தாக்கினார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் பூகம்பத்துக்கு பிறகு பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா கொள்கையில் வேறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நவம்பர் 28-ந் தேதி ஆட்சி அமைத்தது.
பின்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். உத்தவ் தாக்கரே தற்போது எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லை.
அவர் முதல்-மந்திரி பதவியில் தொடர 6 மாதத்திற்குள் அதாவது அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்குள் இரண்டில் ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும். எனவே உத்தவ் தாக்கரே வருகிற 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் துரதிருஷ்டம் கொரோனா வைரஸ் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
கவர்னர் மீது தாக்கு
இதனால் உத்தவ் தாக்கரே தனது பதவியை காப்பாற்றிக் கொள்வரா என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடந்த 6-ந் தேதி மாநில மந்திரிசபை பரிந்துரை செய்தது.
இது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சட்ட ஆலோசனையை பெற்ற பின்னரும், இன்னும் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்கவில்லை.
இந்த தாமதம் தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மீது சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ராஜ்பவன் அரசியல் சதித்திட்டத்தின் கூடாரமாக மாறக்கூடாது. அரசியலமைப்பிற்கு மாறாக நடந்து கொள்பவர்களை வரலாறு சும்மா விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார்.
மே 28-ந் தேதிக்குள் உத்தவ் தாக்கரேயை கவர்னர் எம்.எல்.சி.யாக நியமிக்காத பட்சத்தில் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story