கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் காங்கிரஸ் கடிதம்


கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் காங்கிரஸ் கடிதம்
x
தினத்தந்தி 20 April 2020 5:43 AM IST (Updated: 20 April 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பாவை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் ஒரு குழுவினர் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி வருகிறது. நாட்டில் 10 லட்சம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கருவிகள் பற்றாக்குறை

ஆனால் தற்போது வரை 10 லட்சம் பேரில் 152 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. ஆயினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருபுறம் பரிசோதனை கருவிகள் பற்றாக்குறையாக உள்ளன. இன்னொரு புறம் டாக்டர்கள், செவலியர்கள் உள்பட மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், உடல் கவச உடைகள் பற்றாக்குைறயாக இருக்கின்றன.

இந்த கவச கடைகள் மொத்தம் 12 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது மாநில அரசிடம் 2.27 லட்சம் கவச உடைகள் மட்டுமே இருக்கின்றன. 5 லட்சத்து 46 ஆயிரத்து 721 என்.95 முகக்கவசங்கள் மட்டுமே உள்ளன. கர்நாடக அரசிடம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 999 ஹைட்ராக்சிகுளோரகுயின் மாத்திரைகள் மட்டுமே உள்ளன.

மருத்துவ வசதிகள்

கர்நாடகத்தில் 18 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 9 மையங்கள் பெங்களூருவிலேயே இருக்கின்றன. 12 ஆயிரத்து 500 ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் வருவதாக அரசு கூறியுள்ளது. இதுவரை அந்த கருவிகள் வரவில்லை. மாநிலத்தில் இதுவரை 17 ஆயிரத்து 594 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் தற்போது உள்ள மருத்துவ வசதிகள் போதுமானது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 25 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சரியான அளவில் கிடைக்கவில்லை. கர்நாடக அரசின் தகவல்படி 21 லட்சம் அமைப்புசார் தொழிலாளர்கள், 1.32 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.

சொந்த ஊருக்கு செல்கிறார்கள்

இது தவிர கோடிக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கல் உடைப்பவர்கள், சலவை தொழிலாளர்கள் என இன்னும் நிறைய தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அந்த தொழிலாளர்கள் தினசரி உழைத்து அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

கூலி வேலைக்காக நகரங்களுக்கு சென்றவர்கள் ஆங்காங்கே சிக்கி கொண்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் கர்நாடகத்திலும், நமது மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வெளி மாநிலங்களிலும் சிக்கி தவிக்கிறார்கள். பலர் கால்நடையாக நடந்தே சொந்த ஊருக்கு செல்கிறார்கள். விவசாயிகள் தக்காளி, பழங்கள், பூக்களை சாகுபடி செய்தனர்.

சம்பளம் வழங்கவில்லை

ஆனால் அவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களின் கஷ்டங்களை தீர்க்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்த வேண்டும்.

கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் பரிசோதனையை முடுக்கிவிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை தொடங்க வேண்டும். உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. அந்த சம்பள நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். அவர்களுக்கு 2 மடங்கு சம்பளம் வழங்க வேண்டும். கொரோனா பாதித்த பகுதிகளை முழுமையாக மூட வேண்டும்.

தெருவோர வியாபாரிகள்

பிற பகுதிகளில் மக்கள் இடைவெளியை பின்பற்றும்படி அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி, 2 லிட்டர் சமையல் எண்ணெய், தக்காளி, பால் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும். நகரங்களில் சிக்கியுள்ள கூலித்தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை சொந்த ஊர்களுக்கு பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும்.

விளைபொருட்களை விற்க முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தெருவோர வியாபாரிகள், சலவை தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், சமையல் தொழிலாளர்கள், கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

நிபுணர் குழு

அரசின் நிவாரண பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது மாநில அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்ட நிதி நிலையை சரிசெய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். ஊரடங்கால் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story