குமரியில் முடங்கியது சுற்றுலா தலங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வருமானம் இல்லாமல் தவிப்பு
கொரோனா வந்ததால் குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் முடங்கின. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
கன்னியாகுமரி,
கொரோனா வந்ததால் குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் முடங்கின. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
உலக சுற்றுலா தலம்
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.
குறிப்பாக கேரளாவில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசிப்பார்கள். பின்னர் முக்கடல் சங்கமத்தில் நீராடுவார்கள். பகவதி அம்மனை தரிசனம் செய்து விட்டு கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் படகில் சென்று கண்டு ரசிப்பார்கள்.
சுற்றுலா பயணிகள்
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக படகு விடப்பட்டுள்ளது. இதுதவிர காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், தூயஅலங்கார உபகாரமாதா திருத்தலம், சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட தவறுவது இல்லை. மாலையில் சூரிய அஸ்தமனத்தையும் பார்த்து விட்டுதான் கன்னியாகுமரியை விட்டு மக்கள் செல்வார்கள்.
இதனால் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அதுவும் சபரிமலை சீசன் காலங்களிலும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படி சுற்றுலா வருவோர் அங்குள்ள ஓட்டல்கள், விடுதிகளில் தங்கி ஓய்வு எடுப்பார்கள். சுற்றுலா பயணிகள் என்ன பொருட்கள் வேண்டுமானாலும் கன்னியாகுமரியில் வாங்கி கொள்ளலாம். அந்த அளவுக்கு அவரவர் விரும்பும் வகையில் அனைத்து விதமான பொருட்களும் அங்கு கிடைக்கும். சுற்றுலா பயணிகளை நம்பியே கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், சாலையோர கடைக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என ஆயிரக்கணக்கானோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
வந்தது கொரோனா
கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது கடைகள் ஏலம் பிரச்சினை உள்ளிட்டவையும் இருந்ததால் போதுமான வருமானம் இல்லை. எனவே இந்த ஆண்டு கோடை காலத்தில் நல்ல வியாபாரம் இருக்கும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என கன்னியாகுமரி மக்களும், வியாபாரிகள், கடை, ஓட்டல் உரிமையாளர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் கோடை காலத்துடன் கொரோனாவும் வந்தது.
சீனாவில் உருவான இந்த வைரஸ் பாரபட்சம் இல்லாமல் பழிவாங்கி வருகிறது. இதில் இருந்து மீள அரசு ஊரடங்கு பிறப்பித்தது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வருகை தடைபட்டது. கன்னியாகுமரி வெறிச்சோடி கிடக்கிறது. வியாபாரிகளும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
சலுகை அளிக்குமா?
ஊரடங்கால் வியாபாரிகளும், ஓட்டல், லாட்ஜ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்கட்டணம், வங்கிக்கடன், சொத்துவரி உள்ளிட்டவை செலுத்துவதில் அவர்களுக்கு 3 மாதங்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளை நம்பியே பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அங்குள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.
கன்னியாகுமரி மட்டும் அல்ல குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை, திற்பரப்பு, பத்மநாபபுரம் அரண்மனை, சொத்தவிளை பீச் உள்ளிட்ட இடங்களையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள். அங்கு சுற்றுலா பயணிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வந்தவர்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது. எனவே அவர்களுக்கும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ஏதாவது நிவாரணம் வழங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அன்னிய செலாவணி
கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு (2019) 69 லட்சத்து 47 ஆயிரத்து 393 சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். இதில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 68 லட்சத்து 23 ஆயிரத்து 82 பேர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 311 பேர். நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதும் கடந்த மாதம் 20-ந் தேதி முன்னெச்சரிக்கையாக விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நிறுத்தியது. 21-ந் தேதி காலை முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. ஊரடங்குநீட்டிக்கப்பட்டதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு நின்று விட்டது. இங்குள்ள விடுதிகள், ஓட்டல்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் அன்னிய செலாவணியால் கிடைக்கும் வருவாயும் நின்று விட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 லட்சத்து 96 ஆயிரத்து 365 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்த ஆண்டு ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 6 லட்சத்து 11 ஆயிரத்து 273 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்த ஆண்டு அடுத்த மாதம் (மே) கோடை சீசன் காலம். ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதியுடன் முடிகிறது. அதன்பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கப்படுமா என்பதை பொறுத்துத்தான் கோடை விடுமுறை சீசன் உண்டா என்பது தெரியும் என்று சுற்றுலாத்துறை சொல்கிறது.
விடை கிடைக்குமா?
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை போல் குமரி மாவட்டம் கிடையாது. அதாவது மற்ற மாவட்டங்களில் எல்லாம் பக்கத்து மாவட்டங்களில் இருந்து அதிகம்பேர் வியாபாரம், கல்வி, வெளியூர் பயணம் என ஏராளமானவர்கள் வருவார்கள். ஆனால் இந்தியாவின் கடைகோடியில் இருப்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் மட்டுமே அதிக அளவு வருவார்கள்.
சுற்றுலா பயணிகளை மையமாக கொண்டே குமரி மாவட்ட வருவாய் கணக்கிடப்படுகிறது. எனவே வருகிற 3-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வருமா? கொரோனா நோய் நம்மை விட்டு போய் விடுமா? மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புமா? சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் வருவார்களா? ஓட்டல்கள், லாட்ஜ்கள், கடைகள் திறக்கப்படுமா? அதில் வழக்கம் போல் வியாபாரம் இருக்குமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்கிறார்கள் குமரி மாவட்ட மக்கள்.
Related Tags :
Next Story