உணவுக்காக குழந்தைகள் அழுவதை தாங்க முடியவில்லை: கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் கதறல்
உணவின்றி குழந்தைகள் அழுவதை தாங்க முடியவில்லை என கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் கதறி அழுதுள்ளார்.
நாகர்கோவில்,
உணவின்றி குழந்தைகள் அழுவதை தாங்க முடியவில்லை என கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
கொரோனா வைரஸ்
குமரி மாவட்டத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருமே நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை, டென்னிசன் தெரு, மணிகட்டிபொட்டல் அனந்தசாமிபுரம் மற்றும் தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பகுதிகளில் வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசின் நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.1000 ரொக்கம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிவாரண பொருட்கள் சரியாக சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படவில்லை என வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்த ஒரு பெண் சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-
மளிகை பொருட்கள்
எங்களுக்கு வீட்டில் இருக்கவே பயமாக இருக்கிறது. எத்தனை நாள் வேண்டுமானாலும் வீட்டில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். மக்களின் நலனுக்காக இதை நீங்கள் செய்கிறீர்கள். அதை நாங்கள் மீற மாட்டோம். அதே சமயம் நாங்கள் உணவு இல்லாமல் அவதிப்படுகிறோம். கொஞ்சமாவது அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தந்து விட்டு அடைத்து வையுங்கள். ரேஷன் பொருட்களை இன்னும் எங்களால் வாங்க முடியவில்லை. கடந்த மாதத்துக்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே இந்த வீடியோவை பார்த்து எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள். வீடுகளில் உணவு இல்லாமல் அடைபட்டு கிடப்பது மிகவும் சித்ரவதையாக உள்ளது. மனதளவில் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். உணவு இல்லாமல் குழந்தை அழுவதை தாங்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
இவ்வாறு அந்த பெண் அழுது கொண்டே பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story