சுங்கச்சாவடி கட்டண வசூலை 6 மாதத்திற்கு நிறுத்த வேண்டும் - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்
நாடு முழுவதும் சுங்கச் சாவடி கட்டண வசூலை 6 மாத காலத்திற்கு நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பிறகு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மத்திய அரசு கேட்டு கொண்டதை தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் குறைவான கனரக வாகனங்கள் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்திற்காக கடும் சிரமங்களுக்கு இடையில் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக ஏற்கனவே இயக்கப்பட்ட வாகனங்களுக்கு வட மாநிலங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் லோடு ஏற்றப்படாமல் காத்திருக்கும் சூழலும், தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு காலியாக செல்ல வேண்டிய நிலையே உள்ளது.
எனவே சரக்கு வாகனங்களை இயக்குவதில் பல்வேறு இன்னல்கள் உள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டண வசூல் வாகன உரிமையாளர்களுக்கு கடும் நிதி சுமையை உண்டாக்குவதோடு, வாகனங்களை இயக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.
மேலும் திருத்தி அமைக்கப்பட்ட கட்டண வசூல் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக சுங்கச்சாவடி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. எனவே சுங்கச்சாவடி கட்டண வசூலை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story