நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு 1 லட்சம் முட்டைகள் வந்தன கொரோனா பாதித்த பகுதியில் வசிப்பவர்களுக்கு வீடு, வீடாக வினியோகம்
நாமக்கல்லில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு ஒரு லட்சம் முட்டைகள் வந்துள்ளன. அவை கொரோனா பாதித்த பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
நாமக்கல்லில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு ஒரு லட்சம் முட்டைகள் வந்துள்ளன. அவை கொரோனா பாதித்த பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
ஒரு லட்சம் முட்டைகள்
குமரி மாவட்டத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை, டென்னிசன் தெரு, மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரம் மற்றும் தேங்காப்பட்டணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது பாதுகாப்பு நடவடிக்கையாக 16 பேர் வசித்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
நாகர்கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்கு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 10 முட்டைகள் நேற்று வழங்கப்பட்டன. மேலும் அம்மா உணவகங்களிலும் இனி காலை மற்றும் மதியம் வேளையில் சாப்பாட்டுடன் சேர்த்து ஒரு முட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக நாமக்கல்லில் இருந்து ஒரு லட்சம் முட்டைகள் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. லாரி மூலமாக இந்த மூடைகள் வந்து சேர்ந்தன.
வினியோகம்
பின்னர் அனைத்து முட்டைகளும் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. முன்னதாக முட்டை ஏற்றி வந்த லாரியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டென்னிசன் தெரு மற்றும் வெள்ளாடிச்சிவிளையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று முட்டை வினியோகம் செய்யும் பணி நடந்தது. மேலும் அம்மா உணவகங்களுக்கும் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆயிரம் வீடுகள்
இதுபற்றி மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் கேட்டபோது, “நாகர்கோவிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. ஒரு வீட்டுக்கு 10 முட்டை வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகங்களில் சாப்பாட்டுடன் சேர்த்து ஒரு முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் இருந்து ஒரு முட்டை 3.50 ரூபாய் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளன” என்றார்.
Related Tags :
Next Story