செஞ்சி அருகே, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்த 7 பேர் கைது
செஞ்சி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி நள்ளிரவு செஞ்சி அருகே சிங்கவரம் கிராமத்தில் பூட்டிக்கிடந்த டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில் ரோந்து சென்றபோது, சாலையோரம் நின்ற 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சிறுகடம்பூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அப்பு என்ற பால்ராஜ்குமார்(வயது 19), ரஞ்சித்(23) ஆகியோர் என்பதும், இவர்கள் அதேபகுதியை சேர்ந்த மோகன்(19), பிரசாந்த்(21), நவீன்குமார்(22) மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்களுடன் சேர்ந்து சிங்கவரம் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்று, அதனை விற்பனை செய்து செலவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த தொகை ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story