சிதம்பரம் கொரோனா வார்டில் முதியவர் திடீர் சாவு - அதிகாரிகள் தீவிர விசாரணை


சிதம்பரம் கொரோனா வார்டில் முதியவர் திடீர் சாவு - அதிகாரிகள் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 20 April 2020 3:30 AM IST (Updated: 20 April 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் திடீரென இறந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி காணப்பட்டவர்கள் என 30 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் மஞ்சக்குப்பம் கருமாரப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 75 வயது முதியவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படாததால் அவர் கொரோனா காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இறந்து போன முதியவருக்கு முதுகுதண்டு பாதிப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளன. கடந்த 14-ந்தேதி அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சுயநினைவு இழந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த முதியவர் நேற்று முன்தினம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்து விட்டார். அவரது உமிழ்நீர் மற்றும் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் முடிவு வந்த பிறகு தான் அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தாரா? என்பது தெரியவரும் என்றார்.

Next Story