திண்டுக்கல்லில் 3 இடங்களில் திறக்கப்பட்ட இறைச்சி கடைகளில் அலைமோதிய அசைவப்பிரியர்கள் - 3 மணி நேரத்தில் விற்பனை முடிந்தது
திண்டுக்கல்லில் 3 இடங்களில் திறக்கப்பட்ட இறைச்சி கடைகளில் அசைவப்பிரியர்கள் அலைமோதினர். 3 மணி நேரத்தில் விற்பனை முடிந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சியில், 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகர் முழுவதும் 13 இடங்கள்தனிமைப்படுத்தப்பட்டன. இதையடுத்து இறைச்சி கடைகளை திறப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உரிமம் இல்லாத இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் இறைச்சி கிடைக்காமல் அசைவப்பிரியர்கள் தடுமாறினர். அதை பயன்படுத்தி சிலர் வீடுகளில் ஆடு, கோழிகளை அறுத்து ரகசியமாக இறைச்சி விற்றனர்.
இதை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி நூற்றாண்டு பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றின் வளாகத்தில் தற்காலிக இறைச்சி, மீன் கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தன.
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவப்பிரியர்கள் காலையிலேயே இறைச்சி கடைகளில் குவிந்தனர். இதனால் சமுதாய இடைவெளியை கடைக்கும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் வரைந்து அதற்குள் நிற்க வைக்கப்பட்டனர். மேலும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இறைச்சி கடைகளில் இறைச்சியை பொட்டலமாக தயாராக வைத்திருந்தனர். இதனால் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,000-க்கும், கோழி இறைச்சி கிலோ ரூ.240-க்கும் விற்பனை ஆனது. இது வழக்கத்தை விட அதிக விலை என்ற போதிலும், இறைச்சியை அதிகம் வாங்கினர். மீன்களின் விற்பனை குறைவாக இருந்தது. இதனால் காலை 9 மணிக்கே இறைச்சி விற்று தீர்ந்தது.
ஆனால், இறைச்சி வாங்குவதற்காக தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் இறைச்சி விற்று தீர்ந்து விட்டதை ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவித்து, மக்களை வெளியேற்றினர். கடைகள் திறந்து 3 மணி நேரத்தில் இறைச்சி விற்பனை முடிந்ததால், ஏராளமான அசைவப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேநேரம் இறைச்சி வாங்கிய மக்களோ விலை அதிகம் என்று புலம்பி சென்றனர்.
Related Tags :
Next Story