மாத்தூர் அருகே எலி மருந்து தின்ற கல்லூரி மாணவி சாவு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் விபரீத முடிவு


மாத்தூர் அருகே எலி மருந்து தின்ற கல்லூரி மாணவி சாவு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 20 April 2020 10:01 AM IST (Updated: 20 April 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் எலி மருந்தை தின்ற கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

ஆவூர், 

மாத்தூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் எலி மருந்தை தின்ற கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

மாணவி சாவு

மாத்தூர் அருகே உள்ள வெண்ணமுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மரியசூசை. இவரது மகள் டீனாமேரி (வயது 17). இவர் திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருந்து வந்த மாணவி டீனாமேரி தனக்கு செல்போன் வாங்கி தரச்சொல்லி தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தடை உத்தரவு காரணமாக செல்போன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கடைகள் திறந்த உடன் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட மாணவி சம்பவத்தன்று கடையில் எலி மருந்தை (விஷம்) வாங்கி தின்றுவிட்டு, வீட்டிற்கு வந்து வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர் அவரை அவரது பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி டீனாமேரி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு

*இலுப்பூர் அருகே உள்ள தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் திம்மன் (62). இவரது அண்ணன் அறுமுகம் (65). இருவரும் ஒரே தெருவில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கிக்கொண்டனர். இதில் திம்மனை, ஆறுமுகம் மற்றும் அவரது மகள் ராஜாகுமாரி இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார். இதில் அறுமுகத்திற்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாகுமாரியை (29) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராயம் விற்ற வாலிபர் கைது

*மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று ஆவூர், பேராம்பூர், மலம்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலம்பட்டியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் தோட்டத்தில் 2 பேர் சாராயம் விற்றுக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மற்றொருவரான சுக்காங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (29) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தப்பியோடிய சின்னு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டீ கேன்கள் பறிமுதல்

*கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டீக்கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கேன்களில் டீ விற்று வந்ததை போலீசார் கண்டறிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் கைது செய்ததோடு 5 டீ கேன்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று தடையை மீறியதாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 107 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 27 இரு சக்கர வாகனங்கள், 3 கார்கள், 3 டீ பாய்லர்கள், 9 மதுபாட்டில்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவரிடம் வாக்குவாதம் செய்த அரசியல் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது

*அறந்தாங்கி அருகே அழியாநிலையில் சாராயம் காய்ச்சுவதாக அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது சாராயம் காய்ச்சி கொண்டிருந்த அறந்தாங்கி கோட்டையை சேர்ந்த செல்வம் (40), மூக்குடியை சேர்ந்த சுரேஷ் (36), ராஜா (32), நாகரெத்தினம் (33), செந்தூரபாண்டியன்(25) ஆகிய 5 பேரையும் கைது செய்து, 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story