மது பழக்கத்தை கைவிட்டு திருந்திய இளைஞர்கள் விழிப்புணர்வு வீடியோவுக்கு பொதுமக்கள் பாராட்டு
ஊரடங்கால் மது பழக்கத்தை கைவிட்டதாக கறம்பக்குடி இளைஞர்கள் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கறம்பக்குடி,
ஊரடங்கால் மது பழக்கத்தை கைவிட்டதாக கறம்பக்குடி இளைஞர்கள் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஊரடங்கு அமல்
குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும். மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு. இவையெல்லாம் தமிழக அரசின் மது விலக்கு பிரசார வாசகங்கள். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மதுவிற்பனை, மதுவால் ஏற்படும் குடும்ப பிரச்சினை போன்றவற்றால் மதுவிலக்கு குறித்து சமூக அக்கறை கொண்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் அது சாத்தியமாக வில்லை. மாறாக மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மது குடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
வீடியோவிற்கு வரவேற்பு
இந்த ஊரடங்கு காலத்தில் மது குடிக்க முடியாததால் ஒன்றிரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. கள்ளத்தனமாக மது விற்பனை, சாராயம் விற்பனை போன்றவையும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தினமும் மது குடிக்கும் பழக்கம் உள்ள கறம்பக்குடி பகுதி இளைஞர்கள் சிலர் ‘சியர்ஸ்’ சொல்லி மோர் குடிப்பது போன்ற காட்சிகளுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் தினமும் மது குடித்து வருவாயை இழந்து வந்த நாங்கள் தற்போது மது கிடைக்காத நிலையில் மது பழக்கத்தை முற்றிலும் கைவிட முடிவு செய்துள்ளோம். மதுகுடிக்காததால் உடம்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சாப்பாட்டு முறை, குடும்பத்தினர் காட்டும் அக்கறை போன்றவை எங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மது பழக்கத்தை உடனே கைவிட முடியாது என்பதெல்லாம் பொய், நிச்சயம் மது பழக்கத்தை கைவிடலாம்.
வாழ்க்கையை வாழ கற்று கொண்டோம் என பதிவிட்டு இளைஞர்கள் வெளியிட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோவிற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதற்கு அரசு மது விலக்கை அமல்படுத்தும் தருணம் இது எனவும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story