திருட்டு மதுபான விற்பனைக்கு காவல்துறையே பொறுப்பு - கவர்னர் கிரண்பெடி கண்டிப்பு
புதுவையில் திருட்டு மதுபான விற்பனைக்கு காவல்துறையே பொறுப்பு ஏற்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 25-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதையொட்டி புதுவையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது.
அதன்படி புதுவையில் உள்ள அனைத்து மதுபான கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் புதுவையில் கள்ளத்தனமாக தொடர்ந்து மதுபானம் விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க கலால்துறை சார்பில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காவல்துறையினரும் மது விற்பவர்களை பிடித்து கைது செய்து வருகிறார்கள். இதற்கிடையே கள்ளத்தனமாக மதுபானம் விற்றதாக 30 மதுபான கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமீறலுக்காக 142 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் எந்த ஒரு காவல் நிலைய எல்லை பகுதியிலும் திருட்டுத்தனமாக மதுபான விற்பனை நடந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி என்னிடமும், போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடமும் காணொலி மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். மதுபான விற்பனைக்கு அந்த காவல் நிலைய அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். காவல் துறையும், கலால் துறையும் ஒருவர் மீது ஒருவர் பழி போடக்கூடாது. காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் இது நடக்க முடியும். எனவே இனிமேலும் போலீசார் அலட்சிய மனோபாவத்துடன் செயல்படக் கூடாது.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story