கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல்


கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல்
x
தினத்தந்தி 20 April 2020 1:15 PM IST (Updated: 20 April 2020 1:15 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என்றாலும், சிறு விவசாயிகளால் அதிக வாடகை செலுத்தி சரக்கு வாகனங்கள் அல்லது லாரிகளில் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியவில்லை. மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்குவதால், விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலை உள்ளது.

இதனால் அறுவடைக்கு தயாரான காய்கறிகள் அறுவடை செய்யப்படாமல் நிலங்களில் விடப்பட்டதோடு, சில இடங்களில் வீணாக கொட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ஊரடங்கால் காய்கறிகள் வீணாவதை தடுக்க வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை இணைந்து கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடம் இருந்து காய்கறிகள் நேரடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வட்டாரங்கள் வாரியாக அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் 5 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளின் இருப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து சரக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் ஏற்றப்பட்டு ஊட்டி ரோஜா பூங்கா அருகே உள்ள 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கு விவசாயிகள் முன்னிலையில் காய்கறிகள் தனித்தனியாக எடை போடப்பட்டு, உழவர் சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்பின்னர் தேவையின் அடிப்படையில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகள் விற்பனை செய்யப்படாத கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நீலகிரி கூட்டு பண்ணைய நிறுவன தலைவர் பெள்ளி பாபு கூறியதாவது:-

இந்த குளிர்பதன கிடங்கில் 3 அடுக்குகளாக 2 பெரிய அறைகள் உள்ளன. தற்போது 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காய்கறிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வரை வைக்கலாம். ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளில் ஏலம் நடைபெற வில்லை. இதனால் விவசாயிகளால் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக காய்கறிகளை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அதனால் உறுப்பினர்களிடம் இருந்து காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். கடந்த 10 நாட்களில் 30 டன் காய்கறிகளை வாங்கி, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story