தலை துண்டாகி இளம்பெண் பலி: கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


தலை துண்டாகி இளம்பெண் பலி: கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2020 7:45 AM GMT (Updated: 20 April 2020 7:45 AM GMT)

தலை துண்டாகி இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 50). இவரது மனைவி சுமித்ரா(45). இவர்களது மகள் நந்தினி(18). 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயும், மகளும் சேர்ந்து ஊட்டி அருகே எப்பநாடு பகுதியில் கேரட் அறுவடை செய்வதற்காக சென்றனர். அறுவடை செய்த பின்னர் கேரட்டுகளை மூட்டைகளில் நிரப்பி லாரியில் ஏற்றிக்கொண்டு, தொழிலாளர்கள் கேரட்டுகளை கழுவி சுத்தப்படுத்துவதற்காக கேத்தி பாலாடாவுக்கு வந்தனர்.

அங்கு கேரட் கழுவும் எந்திரத்தில் கேரட்டுகளை கொட்டி சுத்தம் செய்த பின்னர் தொழிலாளர்கள் மூட்டைகளில் நிரப்பி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தினியின் துப்பட்டா, கேரட் கழுவும் எந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக சுழன்றதால், கண்ணிமைக்கும் பொழுதில் அவரும் சிக்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வருவாய்த்துறையினர், கேத்தி பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உரிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டதாக கூறி கேரட் கழுவும் எந்திரம் உள்ள நிலையம் மற்றும் பம்ப் அறைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி ஊட்டி வண்டிசோலையை சேர்ந்த கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் மஞ்சுநாத்(55), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் நந்தகிஷோார்(40) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story