கோவையில், தடையை மீறி விற்பனை; 665 கிலோ இறைச்சி பறிமுதல் - கடை உரிமையாளர்கள் 5 பேர் கைது


கோவையில், தடையை மீறி விற்பனை; 665 கிலோ இறைச்சி பறிமுதல் - கடை உரிமையாளர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2020 1:15 PM IST (Updated: 20 April 2020 1:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் தடையை மீறி விற்பனை செய்த 665 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் கடை உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், காரணம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவை மாவட்டத்திலும் இந்த நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் ஏராளமானோர் கூடியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 13-ந் தேதி முதல் இறைச்சி கடைகள் செயல்படாது என்றும், தடையை மீறி கடைகளை திறந்து இறைச்சி விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதுடன், கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், வீடுகளில் வைத்து இறைச்சி வெட்டி அவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல வீடுகளில் இறைச்சி எடுத்து சமைப்பது உண்டு. இதனால் மாநகராட்சி பகுதியில் உள்ள சில கடைகள் திறந்து ரகசியமாக கோழி மற்றும் ஆட்டிறைச்சிகளை விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநகர பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில கடைகள் திறந்து வைத்து அதில் இறைச்சி விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனே அதிகாரிகள் அந்த இறைச்சிகளை பறிமுதல் செய்னர். சில கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் கோவை புலியகுளம் பகுதியில் தள்ளுவண்டி, இருசக்கர வாகனங்களில் மீன் விற்பனை செய்வது தெரியவந்தது. அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று வண்டிகளையும், மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதியில், தடையை மீறி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 236 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு விற்பனைக்காக வைத்து இருந்த 665 கிலோ கோழி மற்றும் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

மேலும் கடைகளை திறந்து அங்கு அதிகளவில் இறைச்சி விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர தடையை மீறி விற்பனை செய்த 100 கிலோ மீனும், வண்டிகளும் செய்யப்பட்டு உள்ளது. சில குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்து உள்ளது. அந்த குளங்களில் குவிந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததும் தெரியவந்து உள்ளது.எனவே இதுபோன்று தடையை மீறி குளங்களில் மீன் விற்பனை செய்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story