ஆரணி அருகே செய்யாறு கூட்ரோடு பகுதியில் தற்காலிக காய்கறி மொத்த விலை கடைகளில் விற்பனை தொடக்கம்
ஆரணி அருகே செய்யாறு கூட்ரோடு பகுதியில் தற்காலிக காய்கறி மொத்த விலை கடைகளில் விற்பனை தொடங்கியது. காய்கறிகளை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆரணி,
ஆரணி சூரியகுளம் அருகே காய்கறி மொத்த விலை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தன. அங்கு, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருந்ததால், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு காய்கறி மொத்த விலை விற்பனை கடைகளை ஆரணி-ஆற்காடு சாலையில் செய்யாறு கூட்ரோடு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் செயல்பட, இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, ஆரணி நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர், மின் விளக்கு ஆகிய வசதிகளை செய்து கொடுத்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் நேற்று முன்தினம் காய்கறி வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் சமூக விலகலை கடைப்பிடிப்பதாக கூறி, வியாபாரிகள் தங்களுக்கு புதிய பஸ் நிலைய வளாகத்தில் வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி முடிவு செய்யப்பட்டது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட கலெக்டர் ஆரணி வியாபாரிகளும், பொதுமக்களும் ஊரடங்குக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால், இதனை அனுமதிக்கக்கூடாது. செய்யாறு கூட்ரோடு அருகில் தான் காய்கறி மொத்த விலை விற்பனை கடைகளை நடத்த வேண்டும் என ஒருமனதாக அறிவித்தார்.
இதனால் வியாபாரிகளிடையே காய்கறிகளை விற்பனை செய்வது புதிய பஸ் நிலையத்திலா அல்லது செய்யாறு கூட்ரோடு பகுதியிலா? என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து செய்யாறு கூட்ரோடு பகுதியிலேயே தற்காலிக காய்கறி மொத்த விலை விற்பனை கடைகள் செயல்பட தொடங்கின. அங்கு, வாகனங்களில் வரவழைக்கப்பட்ட வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, பூண்டு மற்றும் இதர காய்கறிகள் குவிந்தன. வியாபாரமும் தொடங்கி பரபரப்பாக நடந்தது. வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆரணி நகரில் காலை 6 மணியில் இருந்து பொதுமக்கள் நடமாட்டமே இல்லை.
Related Tags :
Next Story