தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை: காலையில் திறந்த கடைகள் மாலையில் மூடல் - வியாபாரிகள் ஏமாற்றம்


தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை: காலையில் திறந்த கடைகள் மாலையில் மூடல் - வியாபாரிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 21 April 2020 4:00 AM IST (Updated: 20 April 2020 10:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை என அறிவிக்கப்பட்டதால் நெல்லையில் நேற்று காலையில் திறக்கப்பட்ட கடைகள் மாலையில் மூடப்பட்டன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நெல்லை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதியில் இருந்து இம்மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊர டங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறு-குறு தொழில் மற்றும் தொழிற் சாலைகள் 20-ந்தேதி (நேற்று) முதல் இயங்கலாம் என்று ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இது தமிழகத்தில் அமல்படுத் தப்படுமா? என்ற குழப்பமும் ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் நெல்லை யில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர் கள் நேற்று காலையில் வழக்கம் போல் தங்களது தொழிலை தொடங்கினர். கட்டுமான தொழிலாளர்கள் கட்டிட வேலைக்கு சென்றனர்.

அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஸ்ரீபுரம் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் உள்ள கடைகள் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள கடைகளுக்கு சென்ற னர். இதையொட்டி வியாபாரி களும் தங்களது கடைகளை திறந்து வியாபாரத்தை தொடங்கினர். சிமெண்டு மூட்டைகள், ஹார்டுவேர் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் வேலைக்கு தேவை யான வாடகை சாமான்களையும் கொடுத்தனர்.

இந்த நிலையில் பிற்பகலில் ஊரடங்கு உத்தரவில் எந்தவித தளர்வும் இல்லை, குறிப்பிட்ட தொழில்களுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து போலீசார் கடை வீதிகளுக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து, கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து கடைகளையும் மூடிவிடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

நீண்ட நாட்களாக வியாபாரம் இன்றி தவித்து வந்த வியாபாரிகள் நேற்று முதல் மீண்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம் என மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால், காலையில் திறக்கப் பட்ட கடைகள் மாலையில் மூடப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story