பத்திர எழுத்தர்கள் வேலைநிறுத்த போராட்டம் - சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடின
பத்திர எழுத்தர்களின் அலுவலகங்களை திறக்க அனுமதிக்காததால், அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டும் பத்திர பதிவு நடைபெறாமல் வெறிச்சோடின.
கோவில்பட்டி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் மத்திய அரசு நேற்றில் இருந்து ஊரடங்கில் தளர்வு அறிவித்தது. அதன்படி தமிழத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.
கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பத்திர எழுத்தர்கள் தங்களது அலுவலகங்களை திறந்தனர்.
அப்போது அங்கு வந்த தாசில்தார் மணிகண்டன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலகங்களை திறப்பதற்குதான் அரசு அனுமதி அளித்து உள்ளது. பத்திர எழுத்தர்களின் அலுவலகங்களை திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே பத்திர எழுத்தர்களின் அலுவலகங்களை மூட வேண்டும். இல்லையெனில் அவற்றுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
இதையடுத்து பத்திர எழுத்தர்கள் தங்களது அலுவலகங்களை பூட்டிச் சென்றனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டும், அங்கு எந்த பத்திர பதிவும் நடைபெறவில்லை.
இதுகுறித்து பத்திர எழுத்தர் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கூறுகையில், சொத்து வாங்குவது, விற்பது குறித்து பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து டோக்கன் பெற்ற பின்னர்தான் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்படும்.
எனவே பத்திர எழுத்தர்களின் அலுவலகங்களை திறக்க வலியுறுத்தி, வருகிற 3-ந்தேதி வரையிலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
இதேபோன்று காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், அங்கு பத்திர பதிவு நடைபெறாததால் வெறிச்சோடின.
Related Tags :
Next Story