வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - போலீசாருக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவு


வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - போலீசாருக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவு
x
தினத்தந்தி 21 April 2020 4:00 AM IST (Updated: 21 April 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னிமலை, 

சென்னிமலை பகுதியில் ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லைகள் 6 இடங்களில் உள்ளன. இந்த எல்லைகளில் இரவு, பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 18-ந் தேதி இரவு திருப்பூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் சென்னிமலை அருகே கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு வந்தனர். அவர்கள் மெயின்ரோடு வழியாக வராமல் கிராமங்கள் வழியாக வந்துள்ளனர். அவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

அதன்பின்னர் சென்னிமலை போலீசார் அவர்களை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொரோனா நோய் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் நடக்கும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு நடத்தினார். அவர் சென்னிமலை அருகே ஊத்துக்குளிரோட்டில் உள்ள ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான சிறுக்களஞ்சி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினரிடம் கண்காணிப்பு பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அதன்பிறகு கலெக்டர் சி.கதிரவன் அதிகாரிகள், போலீசாரிடம் பேசும்போது கூறியதாவது:-

வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் நுழையும் கார், லாரி உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசாரும், மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் ஒருவரும், கார்களில் 2 பேருக்கும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதேபோல் லாரிகள் வரும்போது டிரைவர், மாற்று டிரைவர் என 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் ஆட்கள் இருந்தால் லாரிகளை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

வாகன அனுமதி கடிதம் வைத்திருந்தாலும் அதிக நபர்களை ஏற்றி வரும் வாகனங்களை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், நில வருவாய் அதிகாரி தினேஷ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story