பெருந்துறை பகுதிகளில் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு


பெருந்துறை பகுதிகளில் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 20 April 2020 11:00 PM GMT (Updated: 20 April 2020 7:58 PM GMT)

பெருந்துறை பகுதியில் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதால், ரூ.2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

பெருந்துறை, 

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சீனாபுரம், சுள்ளிப்பாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், கராண்டிபாளையம், பொன்முடி, போலநாயக்கன்பாளையம், பாப்பம்பாளையம், சீலம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் மானாவாரி விவசாய நிலங்களாக உள்ளன. அங்கு நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டாலும், ஆழ்குழாய் கிணறுகளை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண்மை செய்து வருகிறார்கள். அங்கு தென்னை, வாழை, மரவள்ளி கிழங்கு, சேனை கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். இந்தநிலையில் ஆழ்குழாய் கிணறுகளை பயன்படுத்தி விவசாயிகள் பலர் சுமார் 350 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். அந்த வாழை நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி வாசுஆறுமுகம் கூறியதாவது:-

வாழைத்தார்கள் நன்கு வளர்ச்சி அடைந்துவிட்டன. ஆனால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால், வாழையை வெட்ட முடியவில்லை. இதனால் மரத்திலேயே வாழைத்தார்கள் பழுத்து வீணாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. வாழை இலைகளும் காற்றில் கிழிந்து வீணாகி விட்டன. ஒரு ஏக்கரில் 700 வாழைக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. இந்த வாழைகளை வளர்க்க மொத்தம் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. எனது நிலத்தில் 2 ஏக்கரில் வாழையை சாகுபடி செய்துள்ளேன். இதுவரை சுமார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலவு செய்துள்ளேன். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக முதலீடு செய்த பணம் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

வாழையில் நல்ல லாபம் கிடைக்கும் என்றே, ஆழ்குழாய் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தோம். பெருந்துறை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சுமார் 350 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.2 கோடி நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story