தடை உத்தரவை மீறி இயங்கிய 2 பட்டாசு ஆலைகளுக்கு ‘சீல்’ - சிவகாசி சப்-கலெக்டர் நடவடிக்கை
தடை உத்தரவை மீறி இயங்கிய 2 பட்டாசு ஆலைகளுக்கு சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிவகாசி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு உள்ளது. மேலும் 144 தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 1000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளில் தற்போது பட்டாசு உற்பத்திக்கு தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்தநிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள போது சிலர் பட்டாசு ஆலைகளை திறந்து உற்பத்தியை தொடங்கி இருப்பதாக சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சிவகாசி தாலுகாவில் உள்ள வெற்றிலையூரணி, அனுப்பன்குளம் ஆகிய கிராமங்களில் 2 பட்டாசு ஆலைகளில் திடீர் சோதனை செய்தார்.
அப்போது அந்த பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வந்ததை சப்-கலெக்டர் தினேஷ்குமார் கண்டுபிடித்தார். பின்னர் இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு 2 பட்டாசு ஆலைகளுக்கும் சீல் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த 2 பட்டாசு ஆலைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர். அந்த ஆலைகள் தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் மற்றும் வெம்பக்கோட்டை போலீசார் தனித்தனியாக வழக்குபதிவு செய்துள்ளனர்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள போது பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை தொடங்கிய 2 ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் தடை உத்தரவு ரத்து செய்யப்படும் வரை எந்த பட்டாசு ஆலைகளையும் திறந்து உற்பத்தியில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story