தாம்பரம் அருகே, சுவர் இடிந்து தந்தை, 2 மகள்கள் பலி


தாம்பரம் அருகே, சுவர் இடிந்து தந்தை, 2 மகள்கள் பலி
x
தினத்தந்தி 21 April 2020 4:15 AM IST (Updated: 21 April 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தந்தை, 2 மகள்கள் என 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பீர்க்கன்காரணை சீனிவாசா நகர் முத்தமிழ் தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம்(வயது 65). கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மகள்கள் கலா(40), சுமித்ரா(25). மூத்த மகள் கலா, திருமணமாகி கணவர் முனுசாமி உடன் ஆந்திராவில் உள்ளார். ராஜாங்கம், மாற்றுத்திறனாளியான தனது இளைய மகள் சுமித்ராவுடன் வசித்து வந்தார்.

தந்தை மற்றும் தங்கையை பார்ப்பதற்காக கலா, பீர்க்கன்காரணை வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜாங்கம், அவருடைய மகள்கள் கலா, சுமித்ரா ஆகிய 3 பேரும் தங்கள் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீட்டு சுவர் ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

3 பேர் பலி

அப்போது திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடுக்குள் சிக்கி தவித்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 3 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இளையமகள் சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஜாங் கம், அவருடைய மூத்த மகள் கலா இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்து ஒரே நேரத்தில் தந்தை, 2 மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story