அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம் நாடுகளுக்கு சென்னையில் இருந்து 4 சிறப்பு விமானங்கள் - 485 பேருடன் புறப்பட்டு சென்றன
சென்னையில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம் நாடுகளுக்கு 4 சிறப்பு விமானங்களில் 485 பேர் புறப்பட்டு சென்றனர்.
ஆலந்தூர்,
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்தனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். அந்தந்த நாட்டு தூதர அதிகாரிகள் உதவியுடன் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த சில தினங்களாக சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூடான் உள்பட பல நாட்டு சுற்றுலா பயணிகள் திருப்பி அழைத்து செல்லப்பட்டனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தங்கியிருந்த வங்காளதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களை 4 சிறப்பு விமானங்களில் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு டெல்லி வழியாக 2 விமானங்கள் சென்றன. இதில் 3 குழந்தைகள், 77 பெண்கள் உள்பட 157 பேர் சோதனைகளை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
அதேபோல் சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 71 பெண்கள் உள்பட 164 பேரும், இங்கிலாந்து சென்ற சிறப்பு விமானத்தில் 13 குழந்தைகள், 69 பெண்கள் உள்பட 164 பேரும் பயணம் செய்தனர்.
ஒரே நாளில் 4 சிறப்பு விமானங்களில் 485 பேர் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story