பரபரப்பாக இயங்கிய இடம் வெறிச்சோடியது: பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறப்பு; மக்கள் யாரும் வராததால் ஊழியர்கள் ஏமாற்றம்
பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. மக்கள் யாரும் வராததால் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் 578 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் பணிகளும், ஆவணங்களை மற்றொருவர் பெயரில் பரிமாற்றம் செய்யும் பணிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. பத்திரப்பதிவுத்துறை ஆவணப்பதிவுகள் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 500 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்ற இலக்குடன் பயணத்தை தொடங்கியது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பத்திரப்பதிவுத்துறை அலுவலங்களையும் மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் பத்திரப்பதிவு துறை ரூ.600 கோடி வரை வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் அரசு அலுவலகங்களில் 20-ந்தேதி முதல் தேவையான ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அலுவலர்களும், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் 33 சதவீதம் பேர் பணியாற்றலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கும் என்று அந்த துறையின் தலைவர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்தார்.
இதையடுத்து 27 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் நேற்று மீண்டும் இயங்க தொடங்கின. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். ஆவணப்பதிவுக்கு வருவோர்கள் கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தி இருந்தார். அவருடைய அறிவுரையை ஏற்று சார்-பதிவாளர்களும், ஊழியர்களும் நேற்று பணியில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் ஏமாற்றம்
பொதுவாக பத்திரப்பதிவு அலுவலகங்கள் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இயங்கும். ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்கி ஆவணப்பதிவுகள் நடைபெறும். ஆனால் நேற்று ஒரு மணி நேரத்துக்கு 4 டோக்கன்கள் வீதம் 25 டோக்கன்கள் மட்டுமே வழங்கி ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்று பத்திரப்பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. எனினும் ஆவணப்பதிவுக்கு யாரும் வரவில்லை. குறிப்பாக குன்றத்தூர், கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் காற்று வாங்கியது. சார்பதிவாளர்களும், ஊழியர்களும் யாராவது ஆவணப்பதிவுக்கு வருவார்களா? என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். ஆனால் ஒருவர் கூட வராததால் அவர்கள் ஏமாற்றமும், தவிப்பும் அடைந்தனர்.
இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்து உள்ளது. எனவே பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்குமா அல்லது இயங்காதா? என்பது குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமியின் உத்தரவுக்காக சார்-பதிவாளர்களும், ஊழியர்களும் காத்து இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story