பொதுமக்கள் யாரும் வராத நிலையில் வெறிச்சோடிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் - விதிமுறைப்படி செயல்பட வாய்ப்பு இல்லை என தகவல்


பொதுமக்கள் யாரும் வராத நிலையில் வெறிச்சோடிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் - விதிமுறைப்படி செயல்பட வாய்ப்பு இல்லை என தகவல்
x
தினத்தந்தி 21 April 2020 4:45 AM IST (Updated: 21 April 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவு அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும் என்று அரசு அறிவித்த நிலையில் நேற்று பொதுமக்கள் யாரும் வராததால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.

விருதுநகர், 

தமிழக பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று முதல் 33 சதவீதம் ஊழியர்களுடன் செயல்படும் என அறிவித்தார். மேலும் ஒரு நாளைக்கு 24 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும், பத்திரப்பதிவின் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு விதிமுறைகளையும் தெரிவித்தார்..

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று திறந்து இருந்தன. ஆனாலும் வெளியில் வசிக்கும் சில ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு அனுமதி அட்டை பெற வேண்டிய நிலை உள்ளதால் அலுவலகங்களுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் யாரும் வராதநிலையில் விருதுநகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஆகியவை வெறிச்சோடி கிடந்தன. ஏனெனில் பொதுமக்களும் அவர்கள் ஊர்களில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வரமுடியாத நிலை உள்ளதாக கூறப்பட்டது.

எனினும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி பத்திரப்பதிவு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என பத்திர எழுத்தர்களும் தெரிவித்தனர். ஒரு பத்திரம் பதிவு செய்வதற்கு சொத்தை விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் என குறைந்தபட்சம் 6 பேர் அலுவலகத்துக்கு வர வேண்டி இருக்கும். உடன் பத்திரப்பதிவு எழுத்தரும், அலுவலக ஊழியர்களும் இருக்க வேண்டி இருக்கும். சொத்தை விற்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் முத்திரைதாள் வாங்குவதற்கு, முத்திரைதாள் விற்பனை கடை திறக்கப்பட வேண்டும். பதிவு செய்ய வேண்டிய பத்திரங்களை நகல் எடுப்பதற்கு ஜெராக்ஸ் கடைகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறாக பத்திரப்பதிவு செய்வதற்கு பல்வேறு நபர்கள் தேவைப்படும் நிலையில் சமூக இடைவெளியுடன் அரசு அறிவித்துள்ளபடி பத்திரங்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இதுதவிர, தமிழ்நாடு பத்திரப்பதிவு எழுத்தர்கள் சங்கத்தினரும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வருவதில் சிரமம் இருக்கும் என்பதால் பத்திரங்கள் எழுதுவதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அரசு அறிவித்துள்ள போதிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரங்களை பதிவு செய்ய வாய்ப்பு இல்லாத நிலை நீடிக்கிறது.

Next Story