மும்பையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் தாராவியில் பாதித்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்து இருக்கிறது.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் கடந்த 11-ந் தேதி மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது. அதன்பிறகு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று மும்பையில் மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதனால் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 90 ஆக உயர்ந்தது.
இவர்களில் பத்திரிகையாளர்கள் 53 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
138 பேர் பலி
இதேபோல மும்பையில் கொரோனாவுக்கு புதிதாக 25 வயது வாலிபர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 138 ஆகி உள்ளது.
இதுதவிர நேற்று நோய் பாதித்தவர்களில் 84 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 394 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
தாராவியில் புதிதாக 30 பேர்
ஆசியாவின் குடிசைப்பகுதியான தாராவியிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று ஒரேநாளில் தாராவியில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதில் 22 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்.
இவர்களில் அதிகபட்சமாக சாஸ்திரி நகரில் 5 பேருக்கும், 60 அடி ரோடு, கல்யாணவாடி பகுதியில் தலா 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றவர்கள் தோர்வாடா, மினாஜூதின் கான் காலா, பி.எம்.ஜி.பி. காலனி, பத்மகோபால் சால், மாட்டுங்கா லேபர் கேம்ப், காலாகில்லா, குஞ்ச் குருவே நகர், முகுந்த்நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story